குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்த வாலிபர் கைது

முதல்-அமைச்சர் செல்லும் வழியில் குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-22 22:30 GMT
அடையாறு,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் உள்ளது. அங்கு இருந்து கடற்கரை சாலை வழியாக முதல்- அமைச்சர் தலைமை செயலகத்துக்கு செல்வது வழக்கம். இதனால் அந்த சாலையில் முதல்-அமைச்சர் வரும் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அந்த சாலையில் மற்ற வாகனங்கள் ஏதும் குறுக்கே வராமல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை கிரீன்வேஸ் சாலையில் போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிரீன்வேஸ் சாலையில் உள்ள அய்யப்பன் கோவில் சந்திப்பு வழியாக கடற்கரையை நோக்கிச் சென்ற ஒரு ஆட்டோ திடீரென முதல்-அமைச்சர் செல்லும் வழியில் திரும்பி குறுக்கே வேகமாக சென்றது.

இதனை பார்த்த போலீசார் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்தனர். ஆட்டோவை ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்தார். அவரை பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35) என்பதும், குடிபோதையில் தவறுதலாக முதல்- அமைச்சர் செல்லும் பாதையில் ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்