ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் சாலை மறியல்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-22 23:00 GMT
திருச்சி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று அங்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சிலர் பலியானதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நேற்று தீவிரமானது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று மாலை மத்திய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க தலைவர் சின்னதுரை உள்பட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு மற்றும் போலீசாருக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு கூறினர். ஆனால் சாலை மறியலை கைவிட அவர்கள் மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் 6 பெண்கள் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்