கூட்டணி ஆட்சி நிர்வாகத்தில் தலையிடவில்லை தேவேகவுடா அறிக்கை

கூட்டணி ஆட்சி நிர்வாகத்தில் தலையிடவில்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2018-05-22 21:15 GMT

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சி நிர்வாகத்தில் தலையிடவில்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

கூட்டணி ஆட்சி

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி இன்று(புதன்கிழமை) அமைகிறது. குமாரசாமி தலைமையில் அமைந்துள்ள மந்திரிசபையில் காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமாருக்கு இடம் தரக்கூடாது என்று தேவேகவுடா நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாயின.

இதை தேவேகவுடா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:–

தலையிடமாட்டேன்

காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைவது குறித்து ஊடகங்களில் சில வதந்திகள் பரவி வருவதை நான் கண்டேன். நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இந்த கூட்டணி ஆட்சியில் எந்த முடிவிலும் நான் தலையிடவில்லை. மந்திரிசபை அமைவதாக இருக்கட்டும், ஒருங்கிணைப்பு குழு ஏற்படுவதாக இருக்கட்டும், முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருக்கட்டும், ஆட்சி நிர்வாக வி‌ஷயமாக இருக்கட்டும் நான் எந்த வி‌ஷயத்திலும் தலையிடவில்லை.

இனி வரும் நாட்களிலும் இந்த கூட்டணி ஆட்சி நிர்வாகத்தில் தலையிட மாட்டேன் என்பதை மாநில மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்