நீலகிரி மாவட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2018-05-22 23:00 GMT
ஊட்டி, 

இந்தியா முழுவதும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், கூட்டமைப்பு தபால் ஊழியர் சங்கம் சார்பில், 2 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள 30 கிளை தபால் அலுவலகங்கள், 21 துணை தபால் அலுவலகங்களில் பணிபுரியும் 363 கிராம அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தபால் அனுப்பும் ஊழியர்கள், கிளை போஸ்ட்மேன், துணை அஞ்சலக அதிகாரி என மொத்தம் 560 பேர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், கிராம அஞ்சல் ஊழியர் சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவினை உடனே வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய தபால் அலுவலகம் முன்பு நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் சந்திரன், நிர்வாகிகள் ஜெயக்குமார், ஆஷா பிரியா, துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து அஞ்சல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமு கூறியதாவது:-

கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் தலைவர் கமலேஷ் சந்திரா குழு கொடுத்த பரிந்துரைகளை, ஓராண்டாகியும் இதுவரை மத்திய அரசு மந்திரி சபையில் ஒப்புதல் பெறவில்லை. இதனால் கிராம அஞ்சல் ஊழியர்கள் மோசமான நிலையில் உள்ளனர். புறநிலை ஊழியர்களாக பணிபுரியும் கிராம அஞ்சல் ஊழியர்களை தபால் துறையின் நிரந்தர ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். எங்களது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், கிராமப்புற பகுதிகளில் உள்ள தபால் அலுவலகங்களில் தபால் பட்டுவாடா, தபால் சிறுசேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் போன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கிராமங்களில் உள்ள 30 கிளை தபால் அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வராததால் மூடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு வழக்கம்போல் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் தபால் துறை அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபடாத சங்கத்தினர் வழக்கம்போல் பணிபுரிந்தனர்.

மேலும் செய்திகள்