விராஜ்பேட்டை அருகே காலில் குண்டு காயத்துடன் சுற்றித்திரிந்த குட்டி யானை வனத்துறையினர் மீட்டனர்
விராஜ்பேட்டை அருகே, காலில் குண்டு காயத்துடன் சுற்றித்திரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.
குடகு,
விராஜ்பேட்டை அருகே, காலில் குண்டு காயத்துடன் சுற்றித்திரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.
குட்டி யானைகுடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே உள்ள இஞ்சலிகெரே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இஞ்சலிகெரே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலில் குண்டு காயத்துடன் ஒரு குட்டி யானை சுற்றித்திரிந்து கொண்டு இருந்தது. அந்த குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அந்த குட்டி யானை வனத்துறையினரிடம் சிக்கவில்லை.
இந்த நிலையில் அந்த குட்டி யானை இஞ்சலிகெரே பகுதியில் உள்ள காபி தோட்டத்தின் அருகே நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரி மரியா கிறிஸ்துராஜ் தலைமையில் அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் காபி தோட்டத்தின் அருகே நின்று கொண்டு இருந்த குட்டி யானையை பிடித்தனர். அப்போது குண்டு காயம் அடைந்து இருந்ததால் அந்த குட்டி யானை நிற்க முடியாமல் நின்றது.
தீவிர சிகிச்சைஇதனை தொடர்ந்து குட்டி யானையை லாரியில் ஏற்றி வனத்துறையினர் துபாரேயில் உள்ள யானைகள் முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு குட்டி யானையின் காலில் இருந்த குண்டை அகற்ற கால்நடை மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அங்கு குட்டி யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறும்போது, குட்டி யானையின் காலில் யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குட்டி யானையை பிடித்து வந்து சிகிச்சை அளித்து வருகிறோம். கூடிய விரைவில் குட்டி யானையை சுட்ட மர்மநபர்கள் பிடிபடுவார்கள் என்றார்.