வரதட்சணை கொடுப்பது சட்டப்படி குற்றம் கவர்னர் கிரண்பெடி பேச்சு

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, மகளிர் வள மையம் மற்றும் இளைஞர், குழந்தைகள் தலைமைத்துவ மையம் ஆகியவற்றின் சார்பில் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி பட்டறை தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2018-05-22 00:17 GMT
புதுச்சேரி,

இதன் தொடக்க விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு முன்னிலை வகித்தார். தற்காப்பு பயிற்சி பட்டறையை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்து அது தொடர்பான பிரசுரத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.

பெண்கள் துணிச்சலுடன் பயணம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களை யாராவது பின்தொடர்ந்தாலோ, கேலி கிண்டல் செய்தாலோ 1031 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உடனே புகார் தெரிவியுங்கள். உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக இருக்கும். புகாரின்பேரில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

வரதட்சணை கொடுப்பது சட்டப்படி குற்றம். வரதட்சணை கேட்டால் தரமாட்டேன் என்று உறுதியாக தெரிவிக்க வேண்டும். அப்போது தான் ஆண்கள் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்துகொள்ள முன்வருவார்கள். பெண்களுக்கு பிடிக்காத நபரை வீட்டில் உள்ளவர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தால் அதனை எதிர்க்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. எப்போதும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உடல் வலிமை கிடைக்கும். உங்களை நீங்களே வழிநடத்தும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பட்டறை வருகிற 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர். இதில் உணர்வு, பாலியல், சமூக பொருளாதாரம், உடல், இணையம் மற்றும் அறிவு ரீதியான தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்