தொழில் அதிபர் வீட்டில் 32 பவுன் நகை-ரூ.1½ லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் 32 பவுன் நகை, ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-05-22 00:09 GMT
ஈரோடு, 

ஈரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 44). லேத் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

கடந்த 18-ந் தேதி ராஜேஸ்வரன் அவருடைய மனைவியுடன் சொந்த ஊரான பூந்துறை சேமூருக்கு சென்றார். நேற்று காலை செட்டிபாளையத்தில் உள்ள ராஜேஸ்வரனின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர், ராஜேஸ்வரனுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து ராஜேஸ்வரன் வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அங்கு கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும், படுக்கை அறையில் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 32 பவுன் நகையும், ரூ.1½ லட்சமும் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஸ்வரனின் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் 32 பவுன் நகையும், ரூ.1½ லட்சமும் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்