ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றுக்கு மின்மோட்டார்கள் பொருத்தியதில் முறைகேடு

ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் ஆழ்துளை கிணற்றுக்கு மின்மோட்டார்கள் பொருத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக மாவட்ட கலெக்டரிடம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

Update: 2018-05-21 23:53 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார்கள் பொருத்தும் பணியில் பழைய மின்மோட்டார்களை பொருத்திவிட்டு புதிய கணக்குகள் காட்டியுள்ளனர். வறட்சி காலத்தில் சிறிய தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியிலும் முறைகேடு நடந்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமமாக இந்த கிராமம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

அதேபோல், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமையில் அக்கட்சியினர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘போடி சிலமலையில் அருந்ததியர் மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இதுவரை நிலம் அளவீடு செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

பழனிசெட்டிபட்டி மருதுபாண்டி தெருவை சேர்ந்த பெருமாள் என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘நான் கூலி வேலை செய்து வருகிறேன். நான் கடந்த ஆண்டு ஒருவரிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கினேன். கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்தவர் எனது மகனை கேரளாவுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு கொத்தடிமையாக நடத்துவதாக எனது மகன் தெரிவித்தார். பின்னர் எனது மகன் ஊருக்கு வந்து விட்டான். இப்போது மீண்டும் எனது மகனை வேலைக்கு அனுப்புமாறு கூறி மிரட்டுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்