மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: லாரிகளில் தண்ணீர் திருடப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு

லாரிகளில் தண்ணீர் திருடப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2018-05-21 23:42 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

அதன்படி திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக் கன்பட்டி, கள்ளிப்பட்டி, ஆலக்குவார்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் சுமார் 80 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி, சிலரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர்.

இதையடுத்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமங்களில் அமைந்துள்ள 13 கிணறுகளில் இருந்து சிலர் லாரிகள் மூலம் தண்ணீரை திருடி விற்பனை செய்கின்றனர். இரவு, பகலாக லாரிகளில் தண்ணீர் திருடும் சம்பவம் நடந்து வருகிறது. ஆனால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை.

முறையாக குடிநீர் வினியோகிக்கக்கோரியும், தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் லாரிகளில் தண்ணீர் திருடுவதை தடுத்து, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இதேபோல் வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஏராளமான பெண்கள் கணவரை இழந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

செங்குறிச்சி அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி மக்களுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் சிலர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த இடத்துக்கு செல்லும் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டுத்தர வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த பழனியம்மாள் (வயது 38) என்பவர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு மனு அளித்தார். அதில், எனது முதல் கணவர் சந்திரன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எங்களுக்கு சுந்தரலட்சுமி (19), சங்கரீஸ்வரி என்ற மகள்களும், ஹரிகரசுதன் என்ற மகனும் உள்ளனர். கணவர் இறந்த பின்னர் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவண மணிகண்டன் என்பவரை, அவருடைய பெற்றோர் சம்மதத்துடன் 2-வதாக திருமணம் செய்து கொண்டேன். அவர் தான் என்னுடைய மூத்த மகள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்தநிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கவனித்து வந்தேன். தற்போது கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள், அவரை கடத்தி சென்று மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டனர். சட்டவிரோதமாக அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அவரை மீட்டுத்தர வேண்டும், என்று கூறியிருந்தார்.

சின்னாளபட்டி, செட்டியப்பட்டி, சாமிபட்டி, அம்பாத்துரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சலவை தொழிலாளர்கள், தமிழ்நாடு வண்ணார் எழுச்சி பேரவை மாநில தலைவர் காளியப்பன் தலைமையில் வந்து மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சலவைத்துறையில் தண்ணீர் தொட்டி சேதமடைந்துள்ளது.

ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லை. சலவைத்துறையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சலவைத்துறையை சீரமைத்து, புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். மேலும் சலவை தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி, வீடு கட்டி கொடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், நேர்முக உதவியாளர் (பொறுப்பு) இந்திரவள்ளி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்