திருஇருதய ஆலய ரோட்டில் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு

இடைக்காட்டூரில் திருஇருதய ஆலயத்திற்கு செல்லும் சாலையில் தேங்கும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2018-05-21 23:00 GMT
மானாமதுரை,

மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்டது இடைக்காட்டூர். ஊராட்சி அந்தஸ்து பெற்ற இந்த ஊரில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திருஇருதய ஆலயம், இடைக்காடர் சித்தர் சமாதி என 2 வழிபாட்டு தலங்கள் உள்ளது. இதுதவிர இன்னும் சில சிறப்பு பெற்ற இடங்கள் உள்ளன. இடைக்காட்டூரில் தெருக்களில் கழிவுநீர் செல்ல வாய்க்கால்கள் உள்ளன. முறையாக அவைகள் பராமரிக்கப்படாததால் சாக்கடை நிரம்பி கழிவுநீர் தெருக்களின் சாலையில் தேங்கி நிற்கின்றன. குறிப்பாக திருஇருதய ஆலயத்திற்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை வாய்க்கால் சேதமடைந்து இருப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

ஆலயத்திற்கு செல்லும் வழிநெடுகிலும் சாக்கடை நீர் நிரம்பி இருப்பதால் கிறிஸ்தவர்களும், சுற்றுலா பயணிகளும் மூக்கை பொத்தியபடியே செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. சாக்கடை நீர் தெருவில் செல்வதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய் பொதுமக்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் தொற்று நோய் வெகு வேகமாக பரவும் நிலையும் உள்ளது. சாக்கடை வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் மற்றும் குப்பைகள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் சாக்கடை நீர் தடையின்றி செல்ல உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இடைக்காட்டூரில் சாக்கடை வாய்க்கால்களை சரிசெய்து கழிவுநீர் முறையாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்