திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; வாலிபர் பலி

திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார். இதையடுத்து பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2018-05-21 22:32 GMT
திருப்பூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகன்கள் சரத்குமார் மற்றும் கார்த்திக் (வயது 26). தங்கமணி தனது குடும்பத்துடன் திருப்பூர் வனிகாரம்பாளையம் வள்ளியம்மைநகர் 1-வது வீதியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். சரத்குமார் டெய்லராக வேலை செய்து வருகிறார். கார்த்திக் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மசாலா, பிஸ்கெட் போன்றவற்றை விற்பனை செய்யும் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் மசாலா மற்றும் பிஸ்கெட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று கடைகளுக்கு வினியோகம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் கார்த்திக் திருப்பூரில் உள்ள கடைகளுக்கு பொருட்களை வினியோகம் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் ஈஸ்வரன் கோவில் பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது இவருக்கு பின்னால் சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ், கார்த்திக் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் கார்த்திக் பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்டார். இதில் அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி கார்த்திக் பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்களும், தகவல் அறிந்து வந்த கார்த்திக்கின் உறவினர்களும் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் முருகன் “குடிபோதையில் பஸ்சை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக கூறி, அவரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா மற்றும் சையது பாபு உள்பட ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய பஸ்சை போலீசார் அங்கிருந்து வேறு இடத்தில் நிறுத்துவதற்காக ஓட்டிச்செல்ல முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பஸ்சின் முன்புற பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். மேலும், பஸ் டயரின் காற்றை பிடுங்கி விடவும் முயற்சி செய்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் சாலை மறியலை கைவிடுவோம்” என்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலைமறியலை பொதுமக்கள் கைவிட்டனர். பின்னர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதைதொடர்ந்து கார்த்திக்கின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்