காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் உண்ணாவிரதம்

திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.;

Update: 2018-05-21 22:45 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி பொதுப்பணித் துறையினர் காவிரி ஆற்றில் ஆய்வு செய்து மணல் குவாரி அமைய உள்ள இடத்தில் கல் ஊன்றி உள்ளனர்.

மணல் லாரிகளின் போக்குவரத்துக்காக அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது பவனமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பூதலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின்போது, பவனமங்கலம் காவிரி ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து கிராம மக்களின் கருத்துகள் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு, குவாரி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை ஆற்றில் மணல் அள்ளப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் பவனமங்கலத்தை சேர்ந்த பாலகணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை(புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் ரெங்கசாமி, தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் மணியரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவக்குமார், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மணிமொழியன், சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் பழனிராஜன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன்.

தஞ்சை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வக்கீல் அணி செயலாளர் வேலுகார்த்திகேயன், திருக்காட்டுப்பள்ளி நகர தி.மு.க. செயலாளர் ஜெயராமன், தமிழ் தேசிய பேரியக்க தஞ்சை மாவட்ட செயலாளர் வைகறை, வக்கீல் நல்லதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் முடித்து வைத்து பேசினார்.

பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் எடுத்தால் விவசாயமும், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கும் என போராட்டத்தின்போது கிராம மக்கள் வலியுறுத்தினர். 

மேலும் செய்திகள்