வேன் மோதி கொத்தனார் பலி டிரைவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்

திருவாரூர் அருகே வேன் மோதியதில் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பலியானார். தெரிந்தே விபத்தினை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-21 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசல் அண்ணா மன்ற தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 45). கொத்தனார் வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து கொண்டு கோமல் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சென்றபோது பின்னால் வந்த ஏ.டி.எம்மிற்கு பணம் கொண்டு செல்லும் வேன், பால்ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே பால்ராஜ் பலியானார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், வேன் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்ற போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தினை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் போலீசார், பலியான பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார், தெரிந்தே விபத்தினை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமாக இருந்த குற்றத்திற்காக கொலை வழக்காகவும், மது போதையில் வாகனத்தை ஓட்டியது என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் திருவாரூர் அருகே உள்ள தப்பாளாம்புலியூரை சேர்்ந்த குருமூர்த்தியை(24) கைது செய்தனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கூறுகையில், இந்த வழக்கில் தெரிந்தே விபத்தினை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த குற்றத்திற்காக டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வாகன டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்