காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 என்ஜினீயர்கள் உடல் கருகிச்சாவு

ஆலங்குளம் அருகே தனியார் காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் 2 என்ஜினீயர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-05-21 23:15 GMT
ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த பால்துரை மகன் கிங்ஸ்டன் (வயது 22) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், டிப்ளமோ என்ஜினீயர் ஆவார்.

இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை ஒன்று பழுதாகி குறிப்பன்குளம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இதனை சரிசெய்யும் பணிக்காக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளத்தைச் சேர்ந்த என்ஜினீயர் முத்துப்பாண்டி (25) என்பவர் வந்து இருந்தார். அவர், அத்தியூத்தில் உள்ள அந்த காற்றாலை நிறுவன அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்து கிங்ஸ்டன், முத்துப்பாண்டி ஆகிய இருவரும் பழுதான காற்றாலைக்கு சென்றனர்.

முத்துப்பாண்டி, காற்றாலை டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பை துண்டித்து அதில் உள்ள பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் பணி முடிந்து, மீண்டும் டிரான்ஸ்பார்மருக்கு மின் இணைப்பை கொடுத்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.

இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு டிரான்ஸ்பார்மர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் முத்துப்பாண்டி, கிங்ஸ்டன் ஆகிய இருவரும் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்தனர். உடல் கருகி உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகமாக காட்சி அளித்தது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காற்றாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 பேர் பலியான சம்பவம் ஆலங்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மகாலிங்க மூர்த்தி, மின்வாரிய துணை இயக்குனர் குத்தாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

மேலும் செய்திகள்