திருச்சி-சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-05-21 22:45 GMT
திருச்சி,

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளான கடந்த 3-ந் தேதியில் இருந்து திருச்சியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து திருச்சியில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை 3.30 மணி அளவில் திடீர் என வானில் சூரியன் மறைந்து கருமேகங்கள் திரண்டன. மாலை 4 மணி அளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த மழையினால் திருச்சி நகரில் தாழ்வான பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை பெய்தபோது பலத்த சூறைக்காற்று வீசியதால் திருச்சி நகரில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. திருச்சி மெக்டனால்ட்ஸ் சாலை ஸ்டேட் வங்கி மெயின் கிளை அருகில் ஒரு வேப்ப மரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்தது. திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனை அருகில் ஒரு மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். சாலையில் விழுந்த மரம் உடனடியாக அறுத்து எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது. இதே போல் புத்தூர் நால்ரோட்டில் விழுந்த மரமும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

திருச்சி வயலூர் சாலை உய்யகொண்டான் திருமலையில் தனபாக்கியம் என்பவருடைய வீட்டில் ஒரு மரம் விழுந்தது. இதனால் அந்த வீட்டின் கூரை மற்றும் சுவர்கள் முழுவதுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. சோமரசம்பேட்டையில் இருந்து வயலூர் செல்லும் சாலையில் சாலை ஓரமாக இருந்த ஒரு தகர கொட்டகை சாலையில் சரிந்து விழுந்தது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். தகர கொட்டகை விழுந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. சூறைக்காற்றினால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டு இருள் சூழ்ந்தது.

மண்ணச்சநல்லூர், சமயபுரம் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல் மண்ணச்சநல்லூரில் இருந்து திருப்பைஞ்சீலி செல்லும் சாலையில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் நிழற்குடை அருகே இருந்த பெரிய கருவேலமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், மண்ணச்சநல்லூரில் இருந்து சமயபுரத்திற்கு செல்லும் சாலையில் நங்கமங்கல சத்திரம், நால்ரோடு அருகே சாலையோரத்தில் இருந்த ராட்சத புளியமரங்கள் வேரோடு சாய்்ந்தன. இதன் காரணமாக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக துறையூருக்கு செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் ஒத்தக்கடை அருகே தனியார் மருத்துவமனையின் சார்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 அடி உயரம் கொண்ட இரும்பால் ஆன ராட்சத விளம்பர பலகை முறிந்து அதன் அருகே இருந்த மளிகை கடையின் மீது விழுந்தது. கடையில் இருந்தவர்கள் உயிர் பிழைக்க அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பல இடங்களில் மரக்கிளைகள் மின் கம்பியின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின் வினியோகம் தடைபட்டது.

நேற்று பெய்த மழையினால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. தங்க கோபுரம் அருகே தேங்கியிருந்த மழை நீர் மூலஸ்தானத்திற்கு செல்லும் வழியில் முதல்படி வரை சுமார் 1 அடி உயரத்திற்கு சூழ்ந்திருந்தது. மழை நேரங்களில் கால்வாய் அமைத்து தெற்கு பிரகாரம் வழியாக தண்ணீரை வெளியேற்றுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள கால்வாய் சரியாக சுத்தம் செய்யாமல் இருந்த காரணத்தினால் தண்ணீர் அடைத்துக்கொண்டு பிரகாரத்தின் வெளிப்பகுதியில் இருந்த சாக்கடை நீர் கோவிலுக்குள் புகுந்தது. இதையடுத்து கோவில் பணியாளர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதேபோல், கோவில் பணியாளர் குடியிருப்பு மற்றும் சமயபுரம் கோவில் கருணை இல்லம் ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றால் அங்கிருந்த வாழைமரம் மற்றும் தென்னை மரங்கள் சாய்ந்தன. 

மேலும் செய்திகள்