தனியார் நர்சிங் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து: தேர்வு எழுத முடியாமல் மாணவிகள் தவிப்பு

தனியார் நர்சிங் கல்லூரி அங்கீகாரம் ரத்து என்று கூறி நிர்வாகம் வெளியே அனுப்பியதால் தேர்வு எழுத முடியாமல் தவிப்பதாகவும், வேறு கல்லூரியில் படிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் மாணவிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2018-05-21 23:00 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றுதல், வேலை வாய்ப்பு, கடனுதவி, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என மொத்தம் 276 மனுக்கள் பெறப்பட்டன.

ஆம்பூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது:-

ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் 23 மாணவிகள் 1½ ஆண்டுகளாக டிப்ளமோ நர்சிங் படித்து வந்தோம். கல்லூரிக்கு அங்கீகாரம் இருப்பதாக கூறி நிர்வாகம் எங்களை சேர்த்தார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து என்றும், அதனால் நாங்கள் தேர்வு எழுத முடியாது என்றும் கல்லூரி நிர்வாகம் கூறி எங்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து கல்லூரியில் இருந்து வெளியேற்றினர்.

நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளியின் மகள்கள். கடன் வாங்கி தான் மிகவும் சிரமப்பட்டு படித்து வந்தோம். இந்த சம்பவத்தால் எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாங்கள் வேறு நர்சிங் கல்லூரியில் எங்களின் கல்வியை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நர்சிங் கல்லூரி நிர்வாகத்திடம் இதுதொடர்பாக கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் வணிகர் சங்க தலைவர் ஞானவேலு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வேலூர் நேதாஜி மார்க்கெட் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்படி அடுக்குமாடி வணிக வளாகமாக மாற்றம் பெறுவதை வணிகர் சங்கம் வரவேற்கிறது. நேதாஜி மார்க்கெட்டில் 732 மாத வாடகை கொண்ட கடைகளாகவும், தரை கடைகளாக 300-க்கும் மேற்பட்ட கடைகளும் இயங்கி வருகிறது.

நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 5 ஆயிரம் குடும்பங்கள் நீண்டகாலமாக நேதாஜி மார்க்கெட்டை நம்பி வாழ்ந்து வருகின்றனர். எனவே புதிய வணிக வளாகத்தில் கடைகளை ஏலம் இல்லாமல் ஏற்கனவே வணிகம் செய்து வரும் வணிகர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தது.

உரிமை குரல் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் சங்கர் கொடுத்துள்ள மனுவில், வேலூரில் உள்ள சம்பங்கி நல்லூர், வெங்கடாபுரம், புதுவசூர் ஆகிய பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்கவேண்டும். அந்த பகுதியில் அரசு மணல் குவாரி தொடங்கினால் அரசுக்கு வருவாய் வரும். கட்டுமான பணிகளுக்கு தடையில்லாமல் குறைந்த விலையில் மணல் கிடைக்கும். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதேபோல் நெமிலி தாலுகா உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள நிலத்தில் சென்னை- பெங்களூரு விரைவு சாலை அமைய உள்ளது. இதற்காக எங்களின் நிலத்திற்கு மிக குறைந்த அளவில் இழப்பீடு தொகை வழங்கி உள்ளனர். இத்தொகை எங்களுக்கு போதாது. எனவே கூடுதல் இழப்பீடு தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்