மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-21 22:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்தார்.

தென்காசி புதிய பஸ் நிலையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், ஆட்டோ ஓட்டுனர் சங்க இணை செயலாளர் ரவி என்ற ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், கோஷம் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், தென்காசி புதிய பஸ் நிலையத்தில் கடந்த 18 ஆண்டுகளாக ஆட்டோக்களை நிறுத்தி, தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் அங்கு ஆட்டோக்களை நிறுத்துவதற்கு தென்காசி போலீசார் இடையூறு செய்து, ஆட்டோ டிரைவர்களை அவதூறாக பேசுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி பிரவீன் பெரியசாமி அளித்த மனுவில், நெல்லை, பாளையங்கோட்டை, மணப்படைவீடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே அவற்றை உடனே சீரமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சோமசுந்தரம், அவருடைய மகன் செல்வகுமார் ஆகியோர் அளித்த மனுவில், கடந்த ஆண்டு முக்கூடலைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்துக்கு பழைய வேனை விலைபேசி வாங்கினோம். இதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கினோம்.

பின்னர் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டதால், அந்த நபர் வேனை திரும்ப எடுத்து சென்றார். ஆனால் எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி தர மறுக்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பணத்தை திருப்பி வாங்கித்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் சீனியப்பன் திருத்து பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் அப்பகுதி மக்கள் அளித்த மனுவில், தச்சநல்லூர்-டவுன் ரோட்டில் உள்ள எங்களது குல தெய்வ கோவிலான புலமாடசாமி கோவிலில் வழிபாடு நடத்த விடாமல், அதனை தனிநபர் பூட்டி வைத்து உள்ளார். மேலும் அந்த கோவிலின் முன்பு அவரது காரையும் நிறுத்தி வைத்துள்ளார். எனவே அந்த நபர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கோவிலை திறந்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலநீலிதநல்லூர் யூனியன் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலின் அருகில் தென்னை மரம் உள்ளது. இதில் இருந்து பெறப்படும் தேங்காய்களை கோவில் வழிபாட்டுக்கு பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் அந்த தென்னை மரத்தை ஏலம் விடுவதற்கு யூனியன் அலுவலக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டு ஜெகதீஷ் துரையை கொலை செய்த மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்ற வேண்டும். ஜெகதீஷ் துரை குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கோடைகால விடுமுறையை முன்னிட்டு, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாக இருந்தது. பொதுமக்கள் குறைவான மனுக்களையே வழங்கினர். 

மேலும் செய்திகள்