தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் வெங்கடேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2018-05-21 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பில் 22-ந் தேதி (அதாவது இன்று) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளன.

எனவே சட்டம்- ஒழுங்கினை பராமரித்திட நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை (புதன்கிழமை) காலை 8 மணிவரை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் சிப்காட் போலீஸ் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், ஊர்வலமாக செல்லுதல், பொதுக்கூட்டம் நடத்துதல், சைக்கிள், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மூலம் பேரணியாக வாள், கத்தி, கம்பு, கற்கள், அரசியல் மற்றும் சாதி கொடி கம்புகள் மற்றும் இதர ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள பொதுமக்களை அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்