கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது

கல்லிடைக்குறிச்சியில் 18 வயது பூர்த்தியாகாத இளம்பெண்ணுக்கும், வாலிபர் ஒருவருக்கும் நேற்று நடைபெற இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அது நிச்சயதார்த்தமாக மாற்றப்பட்டது.

Update: 2018-05-20 22:58 GMT
அம்பை,

கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த முத்து மகன் வேல்முருகன்(வயது22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், களக்காட்டை சேர்ந்த 18 வயது பூர்த்தியாகாத இளம்பெண் ஒருவருக்கும் நேற்று கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று காலையில் இருவீட்டாரும் அந்த கோவிலில் திருமண ஏற்பாட்டில் தீவிரமாக இருந்தனர். வேல்முருகனும், அந்த மணப்பெண்ணும் மணக்கோலத்தில் தயார் நிலையில் இருந்தனர். இதை அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் அந்த கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த இளம்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரிய வந்தது. உடனடியாக இரு குடும்பத்தினரையும் அழைத்த போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டு கொண்டனர். இதை ஏற்று இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்தினர்.

இன்னும் 3 மாதங்கள் கழித்து 18 வயது பூர்த்தி ஆவதால், அதன் பிறகு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து திருமண விழா, நிச்சயதார்த்த நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது. போலீசார் முன்னிலையில், அந்த 2பேருக்கும் 3 மாதங்கள் கழித்து திருமணம் நடத்த இருவீட்டாரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதனால் அந்த கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர், மாப்பிள்ளையும், அந்த மணப்பெண்ணும் அவரவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்