கிராமங்களை தாக்கும் நோய்

‘கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளை மிகவும் காலதாமதமாகவே தெரிந்து கொள்கிறார்கள்.;

Update: 2018-05-20 07:29 GMT
‘கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளை மிகவும் காலதாமதமாகவே தெரிந்து கொள்கிறார்கள். அதனால் மார்பக புற்றுநோய் தீவிரமாக இருக்கும் காலகட்டத்தில்தான் பெரும்பாலானோர் சிகிச்சை பெறுகிறார்கள்’ என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர் நிதின் கங்குவான் கூறுகையில், ‘‘மார்பகபுற்று நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் முக்கியமானவை. அவற்றை கண்டறிந்துவிட்டால் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். முதல்கட்ட அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது. கல்வியறிவு குறைவு, அறியாமை, வறுமை மற்றும் மூடநம்பிக்கை ஆகியவை பல பெண்களின் ஆரோக்கியத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்திருக்கின்றன. அதனால் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வதில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது.

கிராமப்புற பெண்களில் 90 சதவீதம் பேரிடம் மார்பக சுய பரிசோதனை செய்வது பற்றிய புரிதல் இல்லை. மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரியவந்த பின்னரும் 50 சதவீதம் பெண்கள் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. தங்கள் மார்பகத்தில் எந்தவிதமான வலியும் இல்லை. அதனால் மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இல்லை என்று வாதாடுகிறார்கள். அவர்களுக்கு நோயின் தீவிரம் புரிவதில்லை. விழிப்புணர்வில் நகரத்தை காட்டிலும் கிராமப்புற பெண்கள்தான் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள். கிராம புறங்களின் மூலைமுடுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிக அளவில் சென்றடைய வேண்டும்’’ என்கிறார்.

மேலும் செய்திகள்