உஷாரய்யா உஷாரு..

அவளுக்கு 25 வயதில் திருமணம் நடந்தது. கணவர் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்துவந்தார். அவர் மிகுந்த அன்பானவராக இருந்தார்.

Update: 2018-05-20 06:17 GMT
வளுக்கு 25 வயதில் திருமணம் நடந்தது. கணவர் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்துவந்தார். அவர் மிகுந்த அன்பானவராக இருந்தார். மாமனார்- மாமியாரும் அவளை தங்கள் மகள்போல் பாவித்து நடத்தினார்கள். அதனால் மண வாழ்க்கை அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் அவளுக்கு குழந்தை இல்லை. ஆனால் அது குறையாக தெரியாத அளவுக்கு கணவர் குடும்பத்தினர் அவளை கவனித்துக்கொண்டார்கள். குழந்தைபேறுக்கான சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று சாலை விபத்து ஒன்றில் அவளது கணவர் இறந்துபோனார்.

அதற்கான சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து, சில மாதங்கள் கடந்ததும் பெற்றோர் வந்து, அவளது மாமியாரை சந்தித்து, மகளை தங்களோடு அனுப்பிவிடுங்கள் என்றனர். மாமியார் அதற்கு சம்மதிக்கவில்லை. ‘அவளை எங்கள் மகள்போல் நினைத்து பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம். அவள் எங்களுடனே வசிக்கட்டும்’ என்று வேண்டு கோள்வைத்தார்கள். அவளும் தனது கணவர் நினைவாக அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதாக கூறினாள். பெற்றோரும் வேறுவழியில்லாமல் திரும்பிச் சென்றார்கள். அவள் மாமியார் வீட்டிலே நிரந்தரமாக தங்கிவிட்டாலும், அவ்வப்போது பிறந்த வீட்டிற்கும் சென்று வந்தாள். இப் படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

மாமனார்- மாமியார் இருவரும், அவள் இளம் பெண் என்பதால் எதிர்்கால நலன் கருதி அவளுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்பினார்கள். ஆனால் அவள் சம்மதிக்கவில்லை. அதன் பின்பு அவளது பெற்றோர் மூலம் அழுத்தம் கொடுத்து சம்மதிக்கவைத்தார்கள். அவள் சம்மதித்ததும், மாமியாரே மகிழ்ச்சியோடு மருமகளுக்கு வரன் தேடினார். ஓரளவு வசதியான குடும்பம் என்பதால் அவளுக்கு சொந்தமான நகைகள் நிறைய இருந்தன. அதோடு மாமியாரும் தனது நகைகளில் ஒரு பகுதியை மருமகளுக்கு மறுமண பரிசாக கொடுக்க முன்வந்தார்.

இதை எல்லாம் கேள்விப்பட்டு, அந்த மாமியாரின் தூரத்து சொந்தமான ஒருவர், வெளிநாட்டில் சொந்த தொழில் செய்யும் தனது மகனுக்கு அவளை பெண்கேட்டார். போட்டோவை பார்த்தபோது எல்லோருக்கும் அவனை பிடித்திருந்தது. அதனால் அவனை பெண் பார்க்க வருமாறு அழைத்தார்கள். அவனும் வந்தான். அவளை பார்த்தான். இருவருக்கும் பிடித்தம் ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களிலே அவளுக்கு மறுமணம் நடந்தது.

அவன் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் அவளோடு குடும்பம் நடத்திவிட்டு, மீண்டும் வெளிநாட்டிற்கு சென்றான். அவளும் தாய்மை யடைந்தாள். அங்கு சென்றவன், தனது தொழிலை விரிவுபடுத்தப் போவதாகக் கூறி அவளது நகைகளை விற்று பணமாக மாற்றி அனுப்பும்படி கேட்டுக்கொண்டான். ஏதோ ஒரு வழியில், குறிப்பிட்ட நபர்கள் மூலமாக அந்த பணம் அவன் தொழில் செய்யும் நாட்டிற்கு சென்றது. அவன், அவளிடம் அவ்வப்போது போனில் பேசிக்கொண்டிருந்தான். தொழிலை விரிவுபடுத்தி சரிசெய்த பின்பு அடிக்கடி தாய் நாட்டிற்கு திரும்பி வருவேன் என்றும் நம்பிக்கையூட்டினான்.

இந்த நிலையில் அவள் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த மகிழ்ச்சியான தகவலை அவனுக்கு தெரியப்படுத்தினார்கள். ஆனால் அந்த செய்தி அவனுக்கு மகிழ்ச்சியைதரவில்லை. அதன் பின்பு அவளோடு பேசுவதை குறைத்தான். தாய் நாட்டிற்கு திரும்பும் எண்ணமும் அவனுக்கு இருந்ததாக தெரியவில்லை. அதனால் கவலை யடைந்த அவளது முன்னாள் மாமியார், அந்த நாட்டில் வேலைபார்க்கும் ஒருசிலர் மூலம் அவனது உண்மையான வாழ்க்கை நிலையை பற்றி விசாரித்து தகவல் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

சில வாரங்களில் தன்னை வந்தடைந்த தகவல்களை பார்த்த அந்த மாமியாருக்கு கடும் அதிர்ச்சி. ‘அவன் ஏற்கனவே அங்கு ஒரு பெண்ேணாடு குடும்பம் நடத்தி வருகிறான். அந்த பெண் மூலம் அவனுக்கு இரண்டு குழந்தை களும் இருக்கின்றன. அவன் செய்து வந்த சுயதொழில் நசிவடைந்து பெரும் கடனில் சிக்கி, சில சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கிறான். இப்போது அந்த கடன்களை திரும்ப செலுத்தியுள்ளான்’ என்று தகவல் கொடுத்தார்கள்.

உடனே அவனது பெற்றோர் மூலம் இங்கிருந்து, அவனிடம் போனில் தொடர்பு கொண்டார்கள். முதலில் ஏதேதோ கூறி சமாளித்தவன் மிரட்டப்பட்ட பின்பு ஒரு கட்டத்தில், தான் திட்டமிட்டு அந்த குற்றங்களை செய்ததாக ஒத்துக்கொண்டான். ‘நான் இ்ந்த நாட்டில் பண நெருக்கடியில் சிக்கித் தவித்தேன். அதில் இருந்து மீள எனக்கு வழி தெரியவில்லை. கடன்களை செட்டில் செய்யா விட்டால் நான் ஜெயிலுக்கு போகும் நிலை ஏற்பட்டது. அப்போதுதான் இந்த பெண்ணை மறுமணம் செய்துகொண்டால் நிறைய நகைகள் கிடைக்கும் என்று என் பெற்றோர் சொன்னார்கள். நான் இங்கு குடும்பம் நடத்துவது அவர்களுக்குத் தெரியாது. பணத்துக்கு ஆசைப்பட்டு எனது திருமணத்தை மறைத்து அவளை திருமணம் செய்துகொண்டேன். அவள் தாய்மையடைந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தேன். ஆனாலும் அவள் தாய்மையடைந்துவிட்டாள். அவளது நகைகளை விற்றது மூலம் கிடைத்த பணத்தைவைத்து என் கடனை அடைத்து மீண்டுவிட்டேன். இனி எனக்கு வருமானம் வரத் தொடங்கிவிடும். தவணை முறையில் பணத்தை உங்களுக்கு அனுப்பித்தந்துவிடுகிறேன். அதைவைத்து புதிதாக நகைகள் வாங்கிக்கொள்ளுங்கள். அவள் இன்னொரு திரு மணம் செய்துகொள்வதற்கு வசதியாக நான், விவாகரத்தும் கொடுத்துவிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கூறியிருக்கிறான்.

அவளது முன்னாள் மாமியாரும், ெபற்றோரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்! பாவம் அவளும் குழந்தையோடு கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறாள்!

- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்