கனரா வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்தவர்களை பிடிக்க நெல்லையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
தேனி கனரா வங்கி கிளையில் ரூ.1 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லையில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வங்கி லாக்கரில் இருந்து மாயமான நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி,
தேனி நகர் மதுரை சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கு அடகு வைத்த பலரின் நகைகள் மாயமானதுடன், போலி நகைகளும் அடகு வைத்து மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் செந்தில், அவருடைய உதவியாளர் வினோத் ஆகிய 2 பேர் மீதும் வங்கி முதன்மை மேலாளர் சுப்பையா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் செந்தில், வினோத் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுமார் ரூ.1 கோடி மதிப்பில் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. வழக்கில் தேடப்படும் செந்தில், வினோத் ஆகிய 2 பேரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே செந்தில், வினோத் இருவரும் கன்னியாகுமரியில் பதுங்கி இருப்பதாக தேனி மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்களை பிடிக்க சப்–இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்சா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கன்னியாகுமரிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நெல்லைக்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.
அங்கு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள செந்தில் பிடிபட்டால் தான் வங்கியின் லாக்கரில் இருந்து மாயமான நகைகள் என்ன ஆகின என்பது தெரியவரும். ஆனால், அவர் பிடிபடாததால் நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘தலைமறைவாக உள்ள இருவரும் தொடர்ந்து தங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வருகின்றனர். தற்போதைய சூழலில் அவர்களை பிடித்தால் தான் மோசடி செய்யப்பட்ட நகைகள் என்ன ஆனது என்பது தெரியவரும். அத்துடன் இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பதும் நகை மதிப்பீட்டாளர் செந்திலை பிடித்து விசாரணை நடத்தினால் தான் தெரியவரும். வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் வரை நகை மதிப்பீட்டாளர் மட்டும் தனியாக சென்றாரா? அவருடன் வேறு யாரேனும் சென்றார்களா? என்பதை ஆய்வு செய்ய அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால், பாதுகாப்பு பெட்டகம் பகுதியில் பொருத்தப்பட்ட கேமராக்கள் செயல்படவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை நடந்துள்ள விசாரணையில் நகை மதிப்பீட்டாளரே பொதுமக்களிடம் நகைகளை வாங்கி, அவரே கடன் தொகையை வழங்கி, அவரே பாதுகாப்பு பெட்டகம் வரை சென்று நகையை வைத்ததாக தகவல்கள் தெரியவருகிறது. நகைக்கடன் வழங்கும் பணிகள் அனைத்தையும் நகை மதிப்பீட்டாளரே செய்தது ஏன்? அதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.