பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து கவர்னர் செயல்படுகிறார் சித்தராமையா குற்றச்சாட்டு

ஹிட்லரின் வடிவங்களாக நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இருக்கிறார்கள் என்றும், கர்நாடகத்தில் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து கவர்னர் செயல்படுகிறார் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டினார்.

Update: 2018-05-19 00:08 GMT
பெங்களூரு,

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

நாளை(அதாவது இன்று) கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல். இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். கர்நாடகத்தில், பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியலமைப்பு சாசன விதி மீறப்பட்டு உள்ளதன் மூலம் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. இதனால், கவர்னர் எப்போதும் நடுநிலையாக செயல்பட வேண்டும்.

புதிய அரசு அமைப்பது தொடர்பாக கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை எடுத்து கூறி ஆட்சி அமைக்க அனுமதி அளிக்கும்படி கவர்னரிடம் கேட்டு கொண்டோம். எங்களின் கோரிக்கைகளை கவர்னர் காற்றில் பறக்க விட்டுவிட்டார்.

கவர்னர், பா.ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார். அவர் உண்மை நிலையை மறந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கிறார். நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இந்தியாவில் ஹிட்லரின் வடிவங்களாக உள்ளனர். இவர்கள் 2 பேர் கூறும் அறிவுரைகளை கவர்னர் பின்பற்றுகிறார். அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி இருந்தால் கவர்னர் பா.ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து இருக்க மாட்டார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியதன் மூலம் குதிரை பேரத்துக்கு கவர்னர் வழிவகுத்து கொடுத்துள்ளார்.

தற்போது எங்களிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை பா.ஜனதா மிரட்டி வைத்துள்ளது. அவரும் விரைவில் வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்