வைகாசி விசாக விழாவுக்கு கொடிமர கயிறை கிறிஸ்தவ மீனவர்கள் ஒப்படைத்தனர்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்தவ மீனவர்கள் சார்பில் கொடி மர கயிறு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2018-05-19 00:05 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வைகாசி விசாக திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட்டில் இருந்து கொடிபட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. இதே போல இரவு கொடியேற்றுவதற்கான கயிறை கன்னியாகுமரி ரட்சகர் தெருவில் இருந்து கைலி குடும்பத்தை சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

பகவதி அம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரனிடம், கொடியேற்றுவதற்கான கயிறு ஒப்படைக்கப்பட்டது. இதில் கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

27-ந் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சியும், 28-ந் தேதி காலை 9 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்