பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஐம்பொன் சாமி சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2018-05-18 23:15 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐம்பொன்னால் ஆன சிவன், பார்வதி உள்ளிட்ட பல சாமி சிலைகள் இருந்தன.

வழக்கம் போல கோவில் பூசாரி ரவி பிரசாத வர்மா நேற்றுமுன்தினம் இரவு அன்றாட பூஜைகளை முடித்து கொண்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார்.

அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவில் மண்டபத்தில் இருந்த ஐம்பொன்னால் ஆன 2 அடி உயரம் கொண்ட சிவன், 1¼ அடி உயரம் கொண்ட பார்வதி உற்சவர் சிலைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் மூலவர் சிலை இருக்கும் அறையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு எந்த சிலைகளும் கொள்ளை போகவில்லை. இது குறித்து உடனடியாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு, பூசாரி தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

சில தினங்களுக்கு முன்பு இந்த கோவிலில் பக்தி சொற்பொழிவு நடந்தது. இந்த நிகழ்ச்சி காலையில் இருந்து இரவு வரை நடந்தது. இதில் வெளியூரை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது கோவிலை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் சிலைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்