145 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13½ கோடி ஊக்கத்தொகை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தகவல்

145 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13½ கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.

Update: 2018-05-18 21:30 GMT

கோவில்பட்டி, 

145 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13½ கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன்

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல்நிதி கடன் வழங்கும் விழா, தமிழக அரசின் ‘தமிழ் செம்மல்‘ விருது பெற்ற கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜூவுக்கு பாராட்டு விழா நடந்தது.

செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் தலைமை தாங்கி, 38 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 760 பேருக்கு மொத்தம் ரூ.3 கோடியே 29 லட்சம் கடன் உதவி வழங்கினர். பின்னர் அவர்கள், தமிழ் செம்மல் விருது பெற்ற ஆசிரியர் ராஜூவுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:–

உணவு தானிய உற்பத்தியில் முதலிடம்

மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா ரூ.6 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, விவசாயிகளுக்கு மீண்டும் கடன் வழங்க உத்தரவிட்டார். அதனால்தான் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தியில் முதலிடம் பிடித்து, மத்திய அரசின் விருதினை வென்று வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கொள்கையோடு தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் பாராளுமன்ற முடக்கம், அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் நடைபெற்று உள்ளது. இதுபோன்று அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 99 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளோம்.

தமிழகத்தில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கவர்னரும், அரசும் ஒத்துப்போகின்ற நல்ல சூழல் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறியதாவது:–

ரூ.13½ கோடி ஊக்கத்தொகை

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலில் அரசு உடற்பயிற்சி கல்லூரி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். தமிழகத்தில் மேலும் அரசு உடற்பயிற்சி கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. வரும் பட்ஜெட்டில் மீதம் உள்ள இடங்களை நிரப்ப முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார வாரியத்தில் விளையாட்டு துறையினருக்கு அதிக பணியிடங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சிலம்பாட்ட அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற 145 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13 கோடியே 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கோவில்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் சர்வதேச தரம் வாய்ந்த ஆக்கி மைதானங்கள் உள்ளன. இதேபோன்று விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்து பயிற்சி பெறும் வகையில், சர்வதேச தரம் வாய்ந்த 29 விளையாட்டு விடுதிகளும் மற்றும் நீச்சல் குளங்களும் உள்ளன. விளையாட்டு துறைக்கு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஊக்கம் அளித்து வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட பதிவாளர் அருள் அரசு, துணை பதிவாளர் சந்திரா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்