480 கடைகள் அடைக்கப்பட்டன நெல்லையில் ரேஷன் கடை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
நெல்லையில் ரேஷன் கடை பெண் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 480 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நெல்லை,
நெல்லையில் ரேஷன் கடை பெண் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 480 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பெண் ஊழியர் மீது தாக்குதல்நெல்லை சூப்பர் மார்க்கெட் சார்பில், மேலப்பாளையம் சாயன்தரகு தெருவில் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடையில் கொக்கிரகுளத்தை சேர்ந்த சுகந்தி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது ஒரு பெண் அரிசி கேட்டு வந்தார். அப்போது பச்சரிசியும், புழுங்கல் அரிசியும் சேர்த்துதான் வழங்கப்படும் என்று சுகந்தி கூறினார். இதற்கு அவர் புழுங்கல் அரிசி மட்டும் வேண்டும் என்று கூறினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் மகன் அங்கு வந்து சுகந்தியை அடித்து உதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த சுகந்தி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்ணா போராட்டம்இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்தும், அவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை தொழிற்சங்க கூட்டமைப்பினர் நெல்லை சந்திப்பு சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகிகள் கண்ணன், முகமதுசைபூதீன், அய்யப்பன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பண்டாரம், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
480 கடைகள் அடைப்புரேஷன் கடை ஊழியர் சுகந்தி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, பாளையங்கோட்டை, மானூர் தாலுகாவில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று கடைகளை அடைத்துவிட்டு இங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் உள்ள 480 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.