சுரண்டையில் பொதுமக்கள்– வியாபாரிகள் திடீர் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

சுரண்டையில் பொதுமக்கள், வியாபாரிகள் நேற்று திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-05-18 21:00 GMT

சுரண்டை, 

சுரண்டையில் பொதுமக்கள், வியாபாரிகள் நேற்று திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

நெல்லை மாவட்டம் சுரண்டையில் ஏற்கனவே பஸ்நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு புதிய கட்டிட பணிகளும் நடைபெறுகிறது. இதனால் சுரண்டை– சேர்ந்தமரம் ரோட்டில் புதிய மார்க்கெட் அருகே தற்காலிக பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. சுரண்டை நகரப்பஞ்சாயத்துக்கு சொந்தமான இந்த வளாகத்தில் கடந்த ஒரு மாதமாக தற்காலிக பஸ்நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, காத்திருப்பு அறை, கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை தற்காலிக பஸ்நிலையத்துக்கு பஸ்கள் வரவில்லை. சுரண்டை அண்ணா சிலை, அழகு பார்வதியம்மன் கோவில் திடல் ஆகிய இடங்களில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றன. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள் அனைவரும் காலை 10 மணி அளவில் சுரண்டை– சேர்ந்தமரம் ரோட்டில் புதிய மார்க்கெட்டுக்கு எதிர்புறம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்–இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கவிதா மற்றும் போலீசார் வந்தனர். சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், பஸ்கள் அனைத்தும் உடனடியாக தற்காலிக பஸ்நிலையம் வந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ்நிலையத்துக்கு வந்து சென்றன. இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்