கோவில் பாதுகாப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பிக்க 31–ந்தேதி கடைசி நாள்

கோவில் பாதுகாப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31–ந்தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.;

Update: 2018-05-18 20:30 GMT

தூத்துக்குடி, 

கோவில் பாதுகாப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31–ந்தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கோவில் பாதுகாப்பு பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 127 கோவில்களில் 185 கோவில் பாதுகாப்பு பணியிடங்கள் உள்ளன. இதில் 40 முன்னாள் படைவீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் தற்போது பணியில் உள்ளனர். 145 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியில் சேர விரும்புகிறவர்கள் 62 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படை விலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலோ, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலோ வருகிற 31–ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) நேரில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதர படிகள் எதுவும் கிடையாது. தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது எந்தவித குற்ற வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்