கோவை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாய முகாம்

கோவை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண இந்த முகாம்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Update: 2018-05-17 22:00 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற்று வருகிறது. கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை கலெக்டர் ஹரிகரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

வருவாய் தீர்வாய முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளையும், சான்றிதழ்களையும், வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு அளித்து பயன்பெறலாம். மேற்படி மனுக்களை பரிசீலனை செய்து உரிய ஆவணங்களுடன் அளிக்கப்படும் தகுதியான விண்ணப்பங்கள் மீது அன்றைய தினமே, தீர்வு காணப்படும். மற்ற மனுக்கள் தொடர் நடவடிக்கைகளின் பொருட்டு பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும்.

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதி வரையும், கிணத்துக்கடவு தாலுகாவில் 22-ந் தேதி வரையும், அன்னூர் தாலுகாவில் 23-ந்தேதி வரையும், பேரூர் தாலுகாவில் 29-ந் தேதிவரையும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் 23-ந் தேதி வரையும் இந்த முகாம் நடைபெறுகிறது. இதேபோல் மற்ற தாலுகா பகுதிக ளிலும் இந்த முகாம் நடைபெறு கிறது. கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது பகுதியைச் சார்ந்த தாலுகா அலுவலகங்களுக்குசென்று இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், நிலச் சீர்திருத்தம், நிலங்கள் தொடர்பான பட்டா மாறுதல்கள், வாரிசுச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று உள்ளிட்ட இதர சான்றுகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகைகள், குடும்ப அட்டை போன்ற கோரிக்கை மனுக்கள் அளித்து பயனடையலாம்.பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண இந்த முகாம்களில் நடவடிக்கை எடுக்கப் படும்.

இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார், தாசில்தார் சிவக்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்