ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்புக்கு அனுமதி நிராகரிப்பு; ஆட்சி அமைக்க உரிமை கோரி குமாரசாமி கடிதம்

ஆட்சி அமைக்க உரிமை கோரி குமாரசாமி கடிதம் கொடுத்ததால் கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-16 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் குமாரசாமி கடிதம் கொடுத்தார். ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்புக்கு அனுமதி நிராகரிப்பட்டது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவராக குமாரசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கவர்னரிடம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கேட்டன.

கவர்னர் மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்தார். கவர்னர் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க அக்கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ராஜ்பவனுக்கு வந்தனர். குமாரசாமி 10 நிமிடங்களுக்கு முன்பே ராஜ்பவனுக்கு வந்தார். அவரை உள்ளே செல்ல ராஜ்பவன் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து குமாரசாமி ராஜ்பவன் நுழைவு வாயிலில் கேட் முன்பு சிறிது நேரம் காத்திருந்தார். குமாரசாமியை உள்ளே அனுமதிக்காததை கண்டித்து ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ராஜ்பவன் முன்பு சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். நேரம் 5 மணி ஆனதும், குமாரசாமி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஆகியோரை ராஜ்பவனுக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். அக்கட்சிகளின் சார்பில் தலா 10 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்புக்கு கவர்னர் அனுமதி நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து ராஜ்பவனுக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள், நுழைவு வாயிலில் வெளியே நின்றனர். கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து பேசிய குமாரசாமி, தான் சட்டசபை ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும், காங்கிரஸ் ஆதரவு வழங்கும் கடிதத்தையும் கவர்னரிடம் வழங்கினார். மேலும் இருகட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துப்போட்ட கடிதத்தையும் கவர்னரிடம் வழங்கினார். இந்த சந்திப்புக்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆதரவு தீர்மானம் கடிதங்களை கவர்னரிடம் கொடுத்தோம். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எங்களுக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு நாங்கள் உரிமை கோரினோம். இந்த எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தையும் கவர்னரிடம் வழங்கினோம்.

இதே போல் இதற்கு முன்பு கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தொங்கு சட்டசபை அமைந்தது. அப்போது அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பெரிய கட்சியை தவிர்த்துவிட்டு, 2-வது நிலையில் வெற்றி பெற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து பலத்தை பெற்றதால், அவற்றுக்கு ஆட்சி அமைக்க கவர்னர்கள் அனுமதி கொடுத்தது பற்றியும் நாங்கள் எடுத்து கூறினோம். கோவா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதல் மற்றும் அரசியல் சாசனப்படி முடிவு எடுக்குமாறு நாங்கள் கோரினோம். இதையெல்லாம் ஆய்வு செய்து பார்த்துவிட்டு முடிவு எடுப்பதாக கவர்னர் உறுதியளித்தார். கவர்னர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால், அதன் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட எடியூரப்பா, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து, குமாரசாமி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு உரிமை கோரினார். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்ததால் ராஜ்பவன் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த அரசியல் மாற்றங்களால் கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்