எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் உதயகுமார் பேச்சு

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை, மதுரைக்கு எய்ம்ஸ் வந்தே தீரும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார்.

Update: 2018-05-14 23:45 GMT
பேரையூர்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அயைமவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என்று ஏற்கனவே கூறினேன். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 18 மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மதுரையில் நிச்சயமாக அமையும். ஆகவே நான் ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் வராது.

திருமங்கலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெளியூர் பஸ்நிலையம் ரூ.22 கோடியில் அமைய உள்ளது. அந்த புதிய பஸ் நிலையம் விரைவில் கட்டப்படும். மேலும் திருமங்கலம் நகர் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தையும் கொண்டு வருவேன். மத்திய அரசு பஸ்போர்ட் அமைய 3 இடங்களை தேர்வு செய்துள்ளது. அவை சேலம், கோவை, மதுரை ஆகிய இடங்களில் அமைய இருக்கிறது.

மதுரையில் பஸ்போர்ட் அமைய 65 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்ய இருக்கிறோம். அனைத்து வசதிகளும் நிறைந்த பஸ்போர்ட்டை திருமங்கலம் தொகுதியில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.

இது தவிர பல்வேறு நலத்திட்டங்களை திருமங்கலம் தொகுதிக்கு கொண்டு வந்து 234 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்