காரடர்ந்தகுடி கண்மாயை தூர்வார வேண்டும் விவசாய சங்கத்தினர் கோரிக்கை
காரடர்ந்தகுடி கண்மாயை தூர்வார வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் காரடர்ந்தகுடி உள்ள கண்மாய் சுமார் 30 வருடங்களாக தூர்வாராமல் இருப்பதால் நீர்ப்பிடிப்பு ஏற்படுத்த முடியாத அளவுக்கு காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து காட்சியளிக்கிறது. இதுகுறித்து ராமநாதபுரம் உழவு கரங்கள் அமைப்பை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் விவசாய சங்கத்தினர் கூறியதாவது: நயினார்கோவில் யூனியனில் 37 ஊராட்சிகள் 101 கிராமங்கள் உள்ளன.
இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 வருடங்களாக பருவமழை சரியாக பெய்யாததால் விவசாய பயிர்கள் கருகி நாசமாகின.
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் எங்கள் கண்மாய்க்கு வந்து சேரவில்லை. இதனால் எங்கள் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து சிரமமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 30 வருடங்களாக எங்கள் கண்மாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் தண்ணீர் தேக்க முடியாமல் கருவேல மர காடுகளாக காட்சியளிக்கிறது.
அதனை தொடர்ந்து கண்மாய் மற்றும் கால்வாயை தூர்வார வேண்டும் என பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.