வெவ்வேறு இடங்களில், வாக்களிக்க சென்றபோது விபத்து பெண்கள் உள்பட 4 பேர் பலி

ஹாசன் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வாக்களிக்க சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2018-05-12 22:00 GMT
ஹாசன், 

ஹாசன் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வாக்களிக்க சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

2 பெண்கள் பலி

ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா மகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சாரதம்மா(வயது 45), கமலம்மா(55). இவர்கள் நேற்று சட்டசபை தேர்தலையொட்டி வாக்களிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 8 பேருடன் ஆட்டோவில் வாக்குச்சாவடிக்கு சென்று கொண்டு இருந்தனர்.

ஆட்டோ ராமேனஹள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் எதிரே வந்த லாரி திடீரென ஆட்டோவின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சாரதம்மாவும், கமலம்மாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் பத்மேஷ் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ டிரைவர்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பத்மேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. மற்ற 8 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேளூர் டவுன் போலீசார் பலியான சாரதம்மா, கமலம்மா மற்றும் பத்மேசின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பேளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரும்பி வந்த போது...

மேலும், ஒலேநரசிப்புரா டவுனை சேர்ந்த ராஜு என்பவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்த போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஒலேநரசிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்