பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது செவிலியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

Update: 2018-05-12 22:45 GMT
பெரம்பலூர்,

மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. இங்கிலாந்து நாட்டில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் 12-5-1820-ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். அவர் செவிலியர் சேவையில் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பிறந்த மே 12-ம் நாள் உலக செவிலியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு செவிலியர்கள் பூக்களை தூவியும், மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர் களுக்கு செவிலியர்கள் இனிப்பு கொடுத்தனர். மேலும் செவிலியர்கள் ஒருவருக் கொருவர் கை கொடுத்தும், கட்டி அரவணைத்தும் செவிலியர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சில செவிலியர்கள் ஒன்று சேர்ந்து தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது. பின்னர் செவிலியர்கள் கட்டை விரலை உயர்த்தி தங்கள் இலக்கினை அடைவோம் என்று உறுதி எடுத்து கொண்டனர். உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்ததற்காக 251 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருதினை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

அந்த சிறந்த செவிலியர் விருதினை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மும்தாஜ் (வயது 52) என்ற செவிலியர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு, சக செவிலியர்கள், மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளில் சுழற்சி முறையில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகின்றனர். மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும். 

மேலும் செய்திகள்