பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-05-10 22:30 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடந்தது. வட்டாரத் தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் குருசாமி, செல்வக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முள்ளைசெல்லம், இந்திரஜித், மாவட்ட பொருளாளர் நூர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முருகானந்தம் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்டத்தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் பாண்டியன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:- வாடிப்பட்டியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும். சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். வாடிப்பட்டி பஸ்நிலைய கடைகளை சீரமைப்பு செய்ய வேண்டும். விராலிப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும்.

வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கவேண்டும். சோழவந்தான், அலங்காநல்லூரில் உள்ளது போல் வாடிப்பட்டியில் தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும். வாடிப்பட்டி பேரூராட்சிக்கு காவிரிகூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும். வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முதல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகிடங்கு வரை உள்ள நகர்புறசாலையை சீரமைக்க வேண்டும். பெருமாள்பட்டி மேலகண்மாயை தூர்வார வேண்டும்.

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் வழங்கவேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ராயல், அரவிந்தராம், பழனிவேல், ஜெகதீசன், வையாபுரி, வழக்கறிஞர் முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர துணைத்தலைவர் முருகவேல் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்