தஞ்சை பெரியகோவிலில் சேதமடைந்த தரைதளம் அகற்றும் பணி தீவிரம்

தஞ்சை பெரியகோவிலில் சேதமடைந்த தரைதளம் அகற்றும் பணிகள், சுற்றிலும் இரும்பு தடுப்புக்கம்பிகள் அமைத்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நந்தி மண்டபத்தை சுற்றி உள்ள மேடை தளமும் புதுப்பிக்கப்படுகிறது.

Update: 2018-05-10 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1010-ம் ஆண்டு கட்டினான். இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

இந்த கோவிலின் முகப்பு பகுதியில் பெரியகோட்டைசுவர் உள்ளது. அந்த சுவற்றுக்கு உள்ளே கோவிலை சுற்றி வரும் சாலையும், அதற்கு உள்ளே கோவிலை சுற்றி உள்ள திருச்சுற்று மாளிகை சுவரும் உள்ளன. இந்த கோவிலுக்கு நுழையும் இடத்தில் கேரளாந்தகன் கோபுரம் உள்ளது. அதைத்தொடர்ந்து ராஜராஜன் கோபுரம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 214 அடி விமான கோபுரம் உள்ளது. தஞ்சை பெரியகோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது.

இதில் ராஜராஜன்கோபுரத்துக்கும், கேரளாந்தகன் கோபுரத்துக்கும் இடையே புல்தரையிலான பூங்காவும், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்வதற்காக கருங்கல் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் பெருவுடையார்சன்னதியை சுற்றிலும் கருங்கல்லால் ஆன சாலையும், புல்தரையும், செங்கல் தரையும் உள்ளன. இதில் புல்தரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

கோவிலை சுற்றி செங்கற்களால் ஆன தரைதளம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பெரியகோவில் விமானகோபுரத்தை சுற்றிலும் உள்ள தரைதளம் மற்றும் பின்பகுதியில் உள்ள தரைதளம் அதிக சேதம் அடைந்து காணப்படுகின்றன. அதிக சேதம் அடைந்த பகுதிகளில் உள்ள தரைதளம் அகற்றப்பட்டு புதிய செங்கற்கள் கொண்டு தரைதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக சேதமடைந்த தரைதளம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இதனால் வேலை நடைபெறும் இடத்திற்கு அருகே அவர்கள் செல்லாமல் இருப்பதற்காக இரும்புகம்பிகளால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போல் பெருவுடையார் சன்னதியின் முன்பகுதியில் பெரியநாயகி அம்மன் சன்னதி மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. இந்த நந்தி மண்டபத்தை சுற்றி உள்ள மேடையின் தரைதளமும் 3-ல் 2 பகுதி சீர் செய்யப்படுகிறது. இதற்காக பெரியகோவில் வளாகத்தில் செங்கற்கள் கொண்டு வந்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியகோவிலின் 214 அடி விமான கோபுரம் சுத்தம் செய்யப்படுகிறது. வேதியியல் முறையில் ரசாயன கலவை மூலம் பழமை மாறாமல் மழைநீர், பாசி படியாத வகையில் பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்