சிறுவனை கடத்தி கொலை செய்தவருக்கு தூக்கு நாக்பூர் கோர்ட்டு அதிரடி
சிறுவனை கடத்தி கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கி நாக்பூர் செசன்ஸ் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
நாக்பூர்,
சிறுவனை கடத்தி கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கி நாக்பூர் செசன்ஸ் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சிறுவன் கடத்தல்
நாக்பூர் மாவட்டம் காப்ரியை சேர்ந்த சிறுவன் யாஷ் போர்க்கர்(வயது11). இவனது தந்தை நிதின் போர்க்கர். இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து இருக்கிறார். இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் யாஷ் போர்க்கர் திடீரென காணாமல் போனான்.
இதையடுத்து நிதின் போர்க்கருக்கு போன் செய்த ஆசாமி ஒருவர், சிறுவன் யாஷ் போர்க்கரை கடத்தி இருப்பதாகவும், அவனை உயிருடன் ஒப்படைக்க வேண்டுமெனில் ரூ.2 லட்சம் தர வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை கடத்தல்காரரின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
சிறுவன் கொலை
இதற்கிடையே நாக்பூர் மாவட்டம் சோனேகாவ் பகுதியில் சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் கொலையான சிறுவன் யாஷ் போர்க்கர் என்பது தெரியவந்தது. மேலும் அவனது உடலில் 22 இடங்களில் காயம் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து சோனேகாவ் போலீசார் சிறுவன் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தூக்கு தண்டனை
இதில் வாசிம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சந்தோஷ் கட்வே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், அவர் சிறுவனை மது குடிக்க வைத்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு பின்னர் உடலை சோனேகாவ் மிகன் மேம்பாலம் அருகே வீசிச்சென்றதாக தெரிவித்தார். மேலும் அவர் சிறுவனை கொலை செய்த பின்னர் பூஜையில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாக்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியங்களின் அடிப்படையில் சந்தோஷ் கட்வேயை குற்றவாளி என அறிவித்து அவருக்கு தூக்கு தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.