சகன் புஜ்பாலின் மகன் உத்தவ் தாக்கரேவுடன் சந்திப்பு

சகன் புஜ்பாலின் மகன் பங்கஜ் புஜ்பால் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.

Update: 2018-05-09 22:56 GMT
மும்பை, 

சகன் புஜ்பாலின் மகன் பங்கஜ் புஜ்பால் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.

சகன் புஜ்பால்

மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி சகன் புஜ்பால்(வயது70). தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் மராட்டிய பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது அவரது பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் சகன் புஜ்பாலின் உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு மும்பை ஐகோர்ட்டு கடந்த 4-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தற்போது சகன் புஜ்பால் மும்பை கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சையை தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி புனே மாவட்டத்தில் நடைபெற உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ‘ஹல்லா போல்’ போராட்டத்தில் இவர் பங்கேற்று பேச இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரேவுடன் சந்திப்பு

இந்தநிலையில் சகன் புஜ்பாலின் மகன் பங்கஜ் புஜ்பால் நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும், அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை எனவும் சிவசேனா தரப்பில் கூறப்பட்டது.

சகன் புஜ்பால் மந்திரியாக இருந்தபோது சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரேயை கைது செய்ய முயற்சித்ததாலேயே விதி அவரை பழிவாங்கிவிட்டதாக சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதி இருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சகன் புஜ்பால் சிவசேனாவில் இணையப்போகிறாரா என்ற கேள்வி எழும்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பங்கஜ் புஜ்பால், ‘தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எனது தந்தை சிறை சென்றபோதிலும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இதனால் அவருக்கு துரோகம் செய்ய வாய்ப்பே இல்லை’ என கூறினார்.

மேலும் செய்திகள்