குடிநீர் வழங்காததை கண்டித்து 2 பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்

திண்டுக்கல் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, 2 பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.;

Update: 2018-05-09 22:30 GMT
சின்னாளபட்டி

திண்டுக்கல் அருகே அ.வெள்ளோடு ஊராட்சியில் மங்களபுரம் கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறுமலை அடிவாரத்தில் கிணறு அமைக்கப்பட்டு வெள்ளோடு, மங்களபுரம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதுவிர காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடும் வறட்சி காரணமாக கிணறு தண்ணீரின்றி வறண்டது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் மட்டுமே அவ்வப்போது வருவதாக மங்களபுரம் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இதையொட்டி அப்பகுதி மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் முறையாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மங்களபுரம் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை அ.வெள்ளோட்டில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், அலுவலகத்தில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் அ.வெள்ளோடு பஸ் நிலையம் வந்தனர். பின்னர் அவர்கள், காலிக்குடங்களுடன் திண்டுக்கல்லில் இருந்து அ.வெள்ளோடு நோக்கி வந்த அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்சையும் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அவர்களுடன் வெள்ளோடு கிராம மக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து தண்ணீர் வினியோகம் செய்வதற்கான உறுதிமொழி கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு பின் ஊராட்சி அலுவலக பணியாளர்கள் வந்து இனி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்ட பஸ்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்