பக்குவம் இல்லாத ராகுல் காந்தியை மக்கள், பிரதமராக ஏற்பார்களா? பிரதமர் மோடி கடும் தாக்கு

பக்குவம் இல்லாத ராகுல்காந்தியை மக்கள் பிரதமராக ஏற்பார்களா? என்றும் கடுமையாக தாக்கி பேசினார்.;

Update: 2018-05-09 23:30 GMT
கோலார் தங்கவயல்,

நான் அடுத்த பிரதமர் என ராகுல் காந்தி கூறியதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, இது காங்கிரசின் உச்சக்கட்ட கர்வத்தை வெளிக்காட்டுவதாகவும், பக்குவம் இல்லாத ராகுல்காந்தியை மக்கள் பிரதமராக ஏற்பார்களா? என்றும் கடுமையாக தாக்கி பேசினார்.

அடுத்த பிரதமர் ஆவேன்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று ராகுல் காந்தி நேற்று முன்தினம் பெங்களூருவில் அறிவித்தார். இதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். நேற்று கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இதுபற்றி பேசியதாவது:-

கர்நாடகத்தில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இந்திய அரசியல் நிலை குறித்து சில விஷயங்கள் நடந்தது. பிரதமர் பதவியில் அமர சில தலைவர்கள் 40 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். திடீரென்று ஒருவர்(ராகுல் காந்தி) வந்து வரிசையில் வாளியை வைத்துவிட்டு, நான் அடுத்த பிரதமர் ஆவேன் என்று அவரே தன்னிச்சையாக அறிவித்து உள்ளார். அவர், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களை பற்றி கவலைப்படவில்லை. அவரது இந்த அறிவிப்பு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பக்குவம் இல்லாத அவரை நாட்டு மக்கள் பிரதமராக ஏற்றுக்கொள்வார்களா?.

கர்வத்தை வெளிப்படுத்துவதாக...

இது காங்கிரஸ் கட்சியின் கர்வத்தை வெளிப்படுத்துவதாக இல்லையா?. இது அக்கட்சியின் உச்சக்கட்ட கர்வத்தை காட்டுகிறது. அந்த கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லையா?. அதுபற்றி அவர் கவலைப்படவில்லை. அவர் பா.ஜனதாவுக்கு எதிராக பேசுகிறார். பெரிய பெரிய கூட்டங்கள் நடக்கின்றன. என்னை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஆலோசிக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு தான் பிரதமர் ஆவதாக ராகுல் காந்தி சொல்கிறார்.

கூட்டணி கட்சிகளையே அவர் நம்பவில்லை என்பதை இது காட்டவில்லையா?. காங்கிரஸ் ஒரு ‘டீல்‘(பேரம்) கட்சி. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அரசை சோனியா காந்தி ‘ரிமோட் கன்ட்ரோல்‘ மூலம் இயக்கினார். காங்கிரஸ் கலாசாரம், மதவாதம், சாதிவாதம், குற்றம், ஊழல் மற்றும் ஒப்பந்த முறையை கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. அதாவது இதை 6 ‘சி’ என்று சுருக்கமாக சொல்லலாம். இது கர்நாடகத்தின் எதிர்காலத்தை நாசமாக்கிவிட்டது. காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப இப்போது நேரம் வந்துவிட்டது.”

இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் செய்திகள்