ரெயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பயணிகள் போக்குவரத்து பாதிப்பு

ரெயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-05-09 23:30 GMT
சென்னை,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் கடம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சென்னை மற்றும் அரக்கோணம் பகுதிக்கு வேலையின் காரணமாகவும், பல்வேறு பணிகள் காரணமாகவும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரக்கோணத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரெயில்வே நிர்வாகத்தினர் எந்த ஓரு முறையான அறிவிப்பும் இல்லாமல் புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை ரத்து செய்து விடுகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ரெயில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நேற்று காலை திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயில் கடம்பத்தூரில் நிறுத்தப்பட்டது. மறுதிசையில் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த 2 ரெயில்களும் ½ மணி நேரத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் நின்று கொண்டிருந்தது.

ரெயில் மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட ரெயில் பயணிகள் காலை நேரத்தில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் தங்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்லமுடியவில்லை என கூறி கோஷங்களை எழுப்பிய படி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்த பயணிகள் அதன் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் நின்றும் கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் இனிவரும் காலங்களில் ரெயில்களை காலதாமதமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அது தொடர்பான கடிதத்தையும் ரெயில் பயணிகளிடம் காண்பித்தனர். அதை ஏற்றுக்கொண்ட ரெயில் பயணிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்