சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம்-செல்போன்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம், விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-05-09 23:15 GMT
தாம்பரம், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து கொழும்பு வழியாக விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் சென்னையை சேர்ந்த இஸ்மாயில் கனி (வயது 48) என்பவரின் சூட்கேசை சோதனை செய்தபோது, அதில் துணிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த 17 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு ரூ.16 லட்சத்து 83 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக இஸ்மாயில் கனியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் பறிமுதல்

இதே போல துபாயில் இருந்து கொச்சி வழியாக சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த கபீர் (50) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர் ரூ.19 லட்சம் மதிப்புள்ள 604 கிராம் தங்கத்தை துபாயில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது.

அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக கபீரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க டாலர்

சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை சுங்க துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விமானத்தில் ஏற வந்த சென்னையை சேர்ந்த சுகுமாறன்(32) என்பவரது உடமைகளில் 15 ஆயிரத்து 900 அமெரிக்க டாலர்கள் இருந்தை கண்டுபிடித்தனர். அவற்றின் இந்திய மதிப்பு சுமார் ரூ.10 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அவரிடம் இருந்து அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுகுமாறனின் விமான பயணத்தை ரத்து செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்