பம்மலில் வேன் மோதி ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் பலி

பம்மலில் கோழி ஏற்றி வந்த வேன் மோதியதில் 2 ஆட்டோ டிரைவர்கள் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2018-05-09 22:15 GMT
தாம்பரம், 

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மல், சீத்தலை சாத்தனார் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). குன்றத்தூர் கரைமா நகர், மேட்டுதெருவைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவர்கள் இருவரும், பம்மலில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இவர்கள் இருவரும், பம்மல் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே நின்றிருந்தனர். செல்வம் ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு அதில் அமர்ந்து இருந்தார். அவருடன், ராதாகிருஷ்ணன் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்.

வேன் மோதி பலி

அப்போது திருத்தணியில் இருந்து பம்மலுக்கு கோழி ஏற்றி வந்த வேன் ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்றிருந்த செல்வத்தின் ஆட்டோ மீது மோதியதுடன், அருகில் நின்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் மீதும் மோதியது. அதன் பிறகு வேனை டிரைவர் நிறுத்தினார்.

வேன் மோதியதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆட்டோவில் அமர்ந்து இருந்த செல்வமும் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் டிரைவரான திண்டிவனத்தை சேர்ந்த ராஜவேலு (31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்