டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: பாரதீய ஜனதா கட்சியினர் 100 பேர் கைது

டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாரதீய ஜனதா கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-05-09 22:30 GMT
புதுச்சேரி,

போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்த வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக பாரதீய ஜனதா அறிவித்து இருந்தது.

அதன்படி பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று யூகோ வங்கி அருகில் கூடினார்கள். அங்கிருந்து பாரதீய ஜனதா இளைஞர் அணி தலைவர் மவுலித்தேவன் தலைமையில் டி.ஜி.பி. அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம் உள்பட இளைஞர் அணியினர் பலரும் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் வர்த்தக சபையை கடந்து பாரதி பூங்காவில் உள்ள பெருமாள் கோவில் அருகே சென்றதும் போலீசார் அங்கு தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்தனர். ஆனால் அதை தள்ளிக்கொண்டு பாரதீய ஜனதா கட்சியினர் செல்ல முயன்றனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டம் குறித்து மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. புதுவையை மையமாக கொண்டு செயல்படும் கும்பல் நாடு முழுவதும் போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

பல அரசியல்வாதிகளின் பினாமிகள் இதில் ஈடுபட்டுள்ளதால் போலீஸ் டி.ஜி.பி. இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கவில்லை. தனது கட்சிக்காரர்களும் இதில் இருப்பதால் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைதியாக உள்ளார். எனவே இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்