கூடலூர் பாண்டியாறு நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதி செய்யப்படுமா?

கூடலூர் பாண்டியாற்றில் உள்ள நீர்வீழ்ச்சியை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-05-09 22:00 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் குளிர்ந்த காலநிலை கொண்ட மாவட்டமாக உள்ளது. இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த பூங்காக்கள், மலைரெயில், அழகிய பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகளின் நுழைவு வாயிலாக திகழும் கூடலூர் பகுதியில் மட்டும் சுற்றுலா தலங்கள் இல்லை. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நீண்ட காலமாக வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெயரளவுக்கு தொடங்கிய திட்டங்கள் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

கூடலூர் பாண்டியாற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுகிறது. ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை பலத்த மழை பெய்யும். இந்த சமயத்தில் பாண்டியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.

பாண்டியாற்றில் நீர்வீழ்ச்சி உள்ளது. இப்பகுதி யாருக்கும் சரிவர தெரியாத நிலை உள்ளது. ஒருசிலர் மட்டும் இங்கு வந்து செல்கிறார்கள். மழைக்காலத்தில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நீர்வீழ்ச்சி உள்ள இடத்துக்கு யாரும் செல்ல முடியாது. ஆனால் அதன்பின்னர் நேரில் சென்று கண்டு களிக்கலாம். இதனால் கூடலூர் பகுதியில் சுற்றுலா திட்டங்கள் இல்லாத நிலையில் பாண்டியாறு நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கூடலூர்-கோழிக்கோடு சாலையின் குறுக்கே பாண்டியாறு செல்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கேரளாவுக்குள் பாய்கிறது. சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பாண்டியாறு நீர்வீழ்ச்சி உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும். இப்பகுதி மக்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே அதிகாரிகள் உரிய பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்