வால்பாறையின் பெருமை பேசும் சிலை பாதுகாக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வால்பாறையின் பெருமைபேசும் சிலை பாதுகாக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
வால்பாறை
1896-ம் ஆண்டு வால்பாறை பகுதியிலிருந்த வனப்பகுதிகளில் மேற்கு பக்க நிலங்களில் காபித்தோட்டங்கள் அமைக்க அப்போதைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து, அவற்றை விற்பதற்கு உத்தரவிட்டது. இதற்கு 15 பேர் விண்ணப்பித்து நிலங்களை வாங்கினர். இதில் வக்கீல் நரசய்யா என்பவரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள். இதில் வாறகைவின்டில் என்பவர்தான் வாங்கிய இடத்தில் உள்ள மரங்களை வெட்டி காபி பயிர் சாகுபடி செய்வதற்காக நீலகிரியில் 17 ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவமுள்ள கார்வர்மார்ஷ் என்ற ஆங்கிலேய தோட்ட அதிகாரியை பணிக்கு அமர்த்தினார். இந்த கார்வர்மார்ஷ் ஆங்கிலேயே தோட்ட அதிகாரி பூணாச்சி என்ற ஆதிவாசி உதவியுடன் வால்பாறைக்கு வந்தார். இதனால் வால்பாறைக்கு பூணாச்சி மலை என்ற பெயரும் உண்டு. இந்த நிலையில் தோட்ட அதிகாரி கார்வர்மார்ஷ் தனது விடா முயற்சியால் உழைத்து காபி தோட்டங்களை உருவாக்கினார்.
எல்லோரிடத்திலும் இனிமையாக பழகும் குணம் கொண்ட கார்வர்மார்ஷ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வால்பாறை பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார். இதனால் வால்பாறை மலைப்பகுதி உலகளவில் தெரிவதற்கு காரணமாக விளங்கினார். இதனால் அவரை ஆனைமலை தேயிலைத் தோட்டங்களின் தந்தை என்று அழைக் கின்றார்கள்.
இந்த நிலையில் அவர் நீலகிரிக்கு சென்று இறந்து போனாலும் அவரது மனைவி ஆக்னேஷ்சாஜெனோவா இத்தாலியிலிருந்து, கார்வர் மார்ஷ் தேயிலைத் தோட்டங்களை கைநீட்டி காட்டுவது போல சிலை ஒன்றை செய்து அனுப்பி வைத்தார். அதனை வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் நிறுவி உள்ளனர். அது வால்பாறையின் பெருமை பேசுவதாக உள்ளது.
வால்பாறைக்கு வருகின்றவர்கள் இதனை பார்க்காமல் செல்வதில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறியதாவது:-
வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணிகள் கார்வர்மார்ஷ் சிலைக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுக்காமல் யாரும் செல்வதில்லை. இந்த நிலையில் பல சுற்றுலாபயணிகள் இந்த சிலையின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்து சிலையை சேதப்படுத்தி வருகின்றனர்.இதனால் வால்பாறையின் வரலாற்று சின்னமாக விளங்கும் கார்வர்மார்ஷ் சிலை விரைவில் பழுதடைந்து போவதற்கும், உடைந்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த சிலை வளாகத்தில் சுற்றுலாபயணிகள் பலர் இரவு நேரங்களில் மது அருந்தி சிலை வளாகத்தை அசுத்தம் செய்து வருகின்றார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அல்லது நகராட்சி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் சார்பில் கார்வர்மார்ஷ்சிலை வளாகத்திற்குள் சுற்றுலாபயணிகள் செல்லாதவாறு பாதுகாப்பு வளையம் அமைத்து உரிய பாதுகாப்பு வழங்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.