புதிய மணல் குவாரி அமைக்க தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்பட்ட புதிய மணல் குவாரிக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து திருமானூரில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2018-05-09 22:45 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு புதிய மணல் குவாரி தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கிய திருமானூர் ஒன்றியப்பகுதி மக்கள், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தொடங்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனாலும், பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே புதிய மணல் குவாரி கடந்த 4-ந் தேதி போலீசார் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. அன்றே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம், சாலை மறியல், சுடுகாட்டில் குடியேறுதல், கடையடைப்பு, கையெழுத்து இயக்கம், கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுகளை கீழே போட்டும், கலெக்டரிடம் ஒப்படைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இடைக்கால தடை

மேலும், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கொள்ளிடம் ஆற்றில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும், எனவே மணல் குவாரியை அமைக்க தடைசெய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தொடங் கப்பட்ட மணல் குவாரிக்கு ஜூன் 5-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதையடுத்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் திருமானூர் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ம.தி.மு.க. வாரணவாசி ராஜேந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல், கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழு பொறுப்பாளர்கள் தனபால், முத்துக்குமரன் உள்பட பலர் கொண்டனர். மேலும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க நிரந்தர தடை உத்தரவு வரும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்