அதிகாரிகள் உடந்தையுடன் மானாமதுரை வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு

மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் அதிகாரிகள் உடந்தையுடன் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2018-05-09 22:30 GMT
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகள் எதுவும் செயல்படவில்லை. இதனால் கட்டுமான பணிகள் அனைத்தும் சமீப காலமாக திருட்டு மணலை நம்பியே நடைபெற்று வருகின்றது. திருச்சியில் இருந்து கொண்டு வரப்படும் மணல் ஒரு லோடு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் திருட்டு மணல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கிடைப்பதால் பலரும் திருட்டு மணலை வாங்கி கட்டுமான பணிகளை செய்துவருகின்றனர். மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் மணல் திருட்டு என்பது தற்போது அதிகரித்துவிட்டது.

மானாமதுரை மட்டுமின்றி அருகில் உள்ள கல்குறிச்சி, ஆலங்குளம், கள்ளர்வலசை, கீழப்பசலை, வேதியரேந்தல் உள்ளிட்ட ஆற்றுப்படுகையில் இரவு 11 மணியில் இருந்து காலை 4 மணி வரை மணல் தாராளமாக அள்ளப்பட்டு வருகிறது. மணல் திருட்டில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சியினரும் கூட்டணி அமைத்து திருடுவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதுதவிர வருவாய்த்துறை அதிகாரிகள், கனிம வளத்துறை அதிகாரிகள் என பலரும் பினாமி பெயரில் லாரிகள் வாங்கி மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. லாரிகளில் மணல் திருடுவதற்காக, மாட்டு வண்டிகளை பிடித்து அவற்றின் மீது வருவாய்துறையினர் அபராதம் விதித்து மணல் கடத்தலை பிடித்த தாக கணக்கு காட்டுகின்றனர். மாவட்ட அளவில் பறக்கும் படை அமைத்தாலும், அதிலும் சில அதிகாரிகள் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.

பலமுறை மணல் திருட்டு குறித்து தகவல் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என அறிவித்த நடவடிக்கை பெயரளவில் தான் உள்ளது.

மானாமதுரை பகுதியில் மணல் திருட்டில் பெரிய அளவில் ஈடுபடும் 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் மணல் கடத்தல் கும்பல் மீண்டும் லாரிகளில் மணல் அள்ளி விற்பனை செய்து வருகிறது.

எனவே மணல் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்தி, முற்றிலும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்