இளையான்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தி.மு.க. கோரிக்கை

இளையான்குடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-05-09 22:00 GMT
இளையான்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இளையான்குடி உள்ளது. வானம் பார்த்த பூமி என்றழைக்கப்படும் இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழைப்பொழிவு இல்லாததால் இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளநிலையில், விவசாயத்திற்கு தண்ணீர் தேவை என்பது இல்லை. இதனால் இங்குள்ள பல விவசாயிகள் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். இந்தநிலையில் இளையான்குடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான சுப.மதியரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்திலேயே இளையான்குடி பகுதியில் தான் நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக உள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் இங்கு கடுமையாக உள்ளது. இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் 2 வாரத்திற்கு ஒருமுறை வினியோகம் செய்வதால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளது. மேலும் ஆங்காங்கே கூட்டுக்குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய போதிய பணியாளர்கள் இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதில்லை என்கின்றனர். எனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தினசரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்